8 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்


8 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 11 Nov 2018 4:30 AM IST (Updated: 11 Nov 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் 8 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு நேற்று சென்றனர்.

நாகப்பட்டினம்,

தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதை தொடர்ந்து பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல நாகையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது. மேலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.

தொடர் மழை காரணமாக சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கடல் சீற்றமாக காணப்பட்டதால் நாகை செருதூர், காமேஸ்வரம், விழுந்தமாவடி, அக்கரைப்பேட்டை, சாமாந்தான்பேட்டை உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் கடந்த 8 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் தங்கள் படகுகளை கடுவையாற்று கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் அக்கரைப்பேட்டை மீன் இறங்குதளம் வெறிச்சோடி காணப்பட்டது. மீன்பிடி தொழிலை நம்பி உள்ள ஐஸ் தயாரிக்கும் தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள் உள்பட பலர் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் 8 நாட்களுக்கு பிறகு நாகையில் நேற்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். முன்னதாக ஐஸ்கட்டிகள், டீசல், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விசைப்படகுகளில் ஏற்றி இருப்பு வைத்துகொண்டனர். 

Next Story