பாலியல் கொடுமை போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டியாக பெண் போலீசார் செயல்பட வேண்டும்


பாலியல் கொடுமை போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டியாக பெண் போலீசார் செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 11 Nov 2018 4:15 AM IST (Updated: 11 Nov 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் கொடுமை போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டியாக பெண் போலீசார் செயல்பட வேண்டும் என்று போலீஸ் துணை கமிஷனர் நிஷா பேசினார்.

திருச்சி,

திருச்சி மாநகரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களை மேம்படுத்த அங்கு பணிபுரியும் பெண் போலீசாருக்கும், மகளிர் போலீஸ் நிலையங்களில் ஆலோசனை வழங்கும் ஆலோசகர்களுக்கும் தங்கள் பணியை மேலும் சிறப்பாக செய்யும் வகையில் ஒருநாள் திறன் மேம்படுத்தும் பயிற்சி வகுப்பு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதான வளாகத்தில் நேற்று நடந்தது.

திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசுகையில், “மகளிர் போலீஸ் நிலையங்களுக்கு வரும் வழக்குகள் மற்ற போலீஸ் நிலையங்களுக்கு வரும் பிரச்சினைகளை விட வேறுபட்டது. பெண்கள் தங்களுக்கு பிரச்சினை ஏற்படும்போது, பயமின்றி தானாக முன்வந்து போலீஸ் நிலையத்தை அணுக வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் பெண் போலீசார் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு அவர்களுடைய வாழ்க்கைக்கு உதவியாக இருக்க வேண்டும். சிக்கலான பிரச்சினைகளை நுணுக்கமான வழிகளை பயன்படுத்தி தீர்க்க வேண்டும்“ என்று பேசினார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ரா வரவேற்றார். முடிவில் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் (வடக்கு) விக்னேஷ்வரன் நன்றி கூறினார். பயிற்சி வகுப்பில் சிறந்த அனுபவமுள்ள கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் குடும்ப நல ஆலோசகர்கள் மூலமாக பெண் போலீசார் மற்றும் ஆலோசகர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Next Story