மருத்துவர்களுக்கான தேர்வு; 9-ந் தேதி நடக்கிறது அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


மருத்துவர்களுக்கான தேர்வு; 9-ந் தேதி நடக்கிறது அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 10 Nov 2018 11:00 PM GMT (Updated: 10 Nov 2018 8:49 PM GMT)

மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் மருத்துவர்களுக்கான தேர்வு வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், குழந்தைகளுக்கான இதய நோய் பரிசோதனை முகாம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். முகாமில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவிலேயே பள்ளி சிறார்களுக்கான முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் தமிழகத்தில் தான் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி சிறார்களுக்கான 416 நடமாடும் மருத்துவக்குழுக்களும், 770 மருத்துவக்குழுக்களும் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதுவரை தமிழகத்தில் 25 ஆயிரத்து 899 குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.200 கோடி மதிப்பீட்டில் எவ்வித கட்டணமும் இல்லாமல் இதயம் சம்பந்தமான பல்வேறு சிகிச்சைகள் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் வருகிற டிசம்பர் மாதம் 9-ந் தேதி மருத்துவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. மருத்துவர்களுக்கான தேர்வு காலையில் நடத்தப்பட்டு, மாலையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதன் மூலம் 1,884 எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள் பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.

தொடர்ந்து செவிலியர்கள், மருந்தாளுனர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதன்மூலம் மருத்துவத்துறையில் புதிதாக உருவாக்கப்படும் பணியிடங்களையும், பணியாளர்கள் ஓய்வினால் ஏற்படும் காலிப் பணியிடங்களையும் உடனுக்குடன் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு போதுமான நிதி அளித்து டிப்ளமோ முடித்த செவிலியர்களை தேவைக்கேற்ப தற்காலிகமாக நியமித்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதன்மூலம் டெங்கு தடுப்பு பணிகள் எவ்வித தங்குதடையுமின்றி தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் பரணிதரன், கலைவாணி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story