3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி


3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 11 Nov 2018 4:00 AM IST (Updated: 11 Nov 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

சின்னதாராபுரம் அருகே 3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தது. இதனால் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

க.பரமத்தி,

சின்னதாராபுரம் அருகே உள்ள நஞ்சைகாளி குறிச்சி கிராமத்தில் தேவேந்திரன் நகர் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்கள் அனைத்தும் சேதடைந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தேவேந்திரன் நகரில் உள்ள 3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதில் ஒரு மின்கம்பம் அருகில் உள்ள வீட்டின் கூரை மீது விழுந்தது. அப்போது உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் தேவேந்திரன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை தொடர் மின்வெட்டு ஏற்பட்டு மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் மிகவும் அவதி அடைந்தனர். மின்கம்பங்கள் உடைந்து விழுந்தபோது, அருகில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே இப்பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள் அனைத்தையும் உடனடியாக மின்சாரவாரியத்துறையினர் அகற்றி புதிய மின்கம்பங்கள் நட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story