மாவட்ட செய்திகள்

ரூ.5¾ கோடி கொள்ளையடித்தது எப்படி? - விருத்தாசலம், சின்னசேலம் ரெயில் நிலையங்களில் நடித்து காட்டிய கொள்ளையர்கள் + "||" + How was the looting of Rs.5.5 crore? - The burglars acting in Vriddhachalam and Chinnasalem Railway stations

ரூ.5¾ கோடி கொள்ளையடித்தது எப்படி? - விருத்தாசலம், சின்னசேலம் ரெயில் நிலையங்களில் நடித்து காட்டிய கொள்ளையர்கள்

ரூ.5¾ கோடி கொள்ளையடித்தது எப்படி? - விருத்தாசலம், சின்னசேலம் ரெயில் நிலையங்களில் நடித்து காட்டிய கொள்ளையர்கள்
ரூ.5¾ கோடி கொள்ளையடித்தது எப்படி என விருத்தாசலம், சின்னசேலம் ரெயில் நிலையங்களில், கொள்ளையர்கள் நடித்து காட்டினர்.
விருத்தாசலம்,

ஓடும் ரெயிலில் ரூ.5¾ கோடி கொள்ளையடித்தது தொடர்பாக கைதான 5 பேர், தாங்கள் கொள்ளையடித்தது எப்படி? என்பது குறித்து விருத்தாசலம், சின்னசேலம் ரெயில் நிலையங்களில் நடித்துக்காட்டினர்.

சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 8.8.2016 அன்று, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.5 கோடியே 78 லட்சம் ஆகும்.


அப்போது அந்த ரெயிலின் மேற்கூரையில் துளையிட்டு அதில் இருந்த ரூ.5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 ஆண்டு தீவிர விசாரணைக்கு பின் இந்த கொள்ளை தொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த மோஹர்சிங், கிருஷ்ணா, மகேஷ்பாரதி, மோகன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சென்னையில் பதுங்கி இருந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கைதானவர்களில் 5 பேரை நேற்று காலை 6.05 மணிக்கு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 வாகனங்களில் அழைத்து வந்தனர்.

அங்கு 1-வது நடைமேடை, ஆஞ்சநேயர் கோவிலுக்கு போலீசார் அழைத்து சென்று கொள்ளையர்களிடம் விசாரணை நடத்தினர். கொள்ளையடித்த பணத்தை எப்படி எடுத்துச்சென்றீர்கள்? என்று போலீசார் கேட்டனர்.

அதற்கு கொள்ளையர்கள், ஓடும் ரெயிலில் கொள்ளையடித்த பணத்தை ரெயிலில் இருந்து வெளியே கொண்டு வந்தது எப்படி? என்று நடித்துக்காட்டினர். இந்த காட்சிகளை போலீசார் தாங்கள் கொண்டு வந்திருந்த வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டனர். இதை தொடர்ந்து காலை 6.25 மணிக்கு போலீசார், கொள்ளையர்களை அழைத்துக்கொண்டு விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு அவர்கள், காலை 7.30 மணிக்கு வந்தனர். அங்குள்ள தானியங்கள் இறங்குதளம் பகுதிக்கு கொள்ளையர்களை அழைத்து சென்று விசாரித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் சேலத்தில் இருந்து சின்னசேலம் வந்த ரெயிலில் ஏறி வந்தீர்களா? அல்லது சின்னசேலத்தில் இருந்து ரெயிலில் ஏறினீர்களா? சின்னசேலம் ரெயில் நிலையத்தில் இருந்து எவ்வாறு ரெயிலின் மேற்கூரை பகுதிக்கு சென்றீர்கள்?, ரெயில் பெட்டியின் மேற்கூரையை துளையிட்டது எப்படி?, அதற்கு பயன்படுத்திய எந்திரம் என்ன? என்பது குறித்து விசாரித்தனர்.

மேலும் சின்னசேலத்துக்கு அந்த ரெயில் எப்போது வந்தது. என்ஜின் நின்ற பகுதி எது?, அப்போது அவர்கள் எங்கு நின்றார்கள் என்பது பற்றியும் கொள்ளையர்கள் நடித்து காட்டினர். அவை அனைத்தும் வீடியோவில் போலீசார் பதிவு செய்தனர்.

இதையடுத்து காலை 7.40 மணிக்கு கொள்ளையர்களை அழைத்துக்கொண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து கொள்ளையர்களை சேலம் ஜங்சன் ரெயில் நிலையம், செவ்வாய்பேட்டை ரெயில்வே குட்ஷெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சில முக்கிய தகவல்களை கொள்ளையர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஆத்தூர் ரெயில் நிலையங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நடைபெற்ற இடங்களில் போலீசார் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

மோஹர்சிங் உள்பட 5 கொள்ளையர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 13 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிந்து நாளை (திங்கட்கிழமை) கொள்ளையர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

போலீஸ் விசாரணையில் ஓடும் ரெயிலில் பெட்டியின் மேற்கூரையில் துவாரம் போட்டு கொள்ளையடித்தது எப்படி? கொள்ளையடித்த பணத்தை செலவு செய்தது எப்படி? என்பது குறித்து கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலம் பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ரெயில் கொள்ளை பற்றி கொள்ளையர்களிடம் விவரமாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது. வாக்குமூல விவரம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் கொள்ளை சம்பவத்தில் மொத்தம் 16 பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர். தற்போது 7 பேர் தான் கைது செய்யப்பட்டு உள்ளனர். மீதி 9 பேரை தேடி வருகிறோம். கொள்ளையர்கள் 16 பேரும் மொத்தமாக தமிழகத்துக்கு வரவில்லை. பல குழுக்களாக பிரிந்து தமிழகம் வந்திருக்கின்றனர்.

சேலத்தில் 4 மாதங்கள் தங்கியிருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு உள்ளனர். சின்ன சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலம் ரெயில் நிலையம் வரை ரெயில் தண்டவாளத்தில் பாலம் அமைக்கும் பணிகள் நடப்பதால் அந்த பகுதியில் மட்டும் ரெயில் மெதுவாக செல்வதை இவர்கள் கண்டறிந்து உள்ளனர். எனவே சின்ன சேலம் ரெயில் நிலையத்தில் கொள்ளையர்கள் ஏறியிருக்கிறார்கள்.

4 கொள்ளையர்கள் மட்டும் ரெயிலின் மேற்கூரைக்கு சென்று துவாரம் போட்டுள்ளனர். ‘கட்டர்’ என்ற சாதனத்தை பயன்படுத்தி ரெயில் பெட்டியின் மேற்கூரையில் துவாரம் போட்டதாக கொள்ளையர்கள் தெரிவித்து உள்ளனர். துவாரம் போட பயன்படுத்திய சாதனத்தை கைப்பற்றுவதற்காக தனிப்படை போலீசார் கொள்ளையர்களின் சொந்த ஊர் உள்ள மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்றுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட ரூ.5.78 கோடி பணத்தின் ஒரு பகுதியை கொள்ளையர்கள் அனைவரும் சமமாக பங்குபோட்டு உல்லாசமாக செலவு செய்துள்ளனர். மற்றொரு பகுதியை ஏராளமான நிலங்களை வாங்க செலவு செய்துள்ளனர். இந்தநிலையில் மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் மீதமிருந்தவற்றை கிழித்து போட்டுவிட்டதாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையடித்த பணத்தில் வாங்கியுள்ள சொத்துகளை முடக்கி கோர்ட்டு மூலம் ஏலத்தில் விட ஏற்பாடு செய்யப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.