காஞ்சீபுரம் மாவட்டத்தில் கோழி வளர்ப்புக்கு அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கோழி வளர்ப்புக்கு அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 11 Nov 2018 10:15 PM GMT (Updated: 11 Nov 2018 6:19 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கோழி வளர்ப்புக்கு அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

2018-19-ம் நிதி ஆண்டில் கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ், காஞ்சீபுரம் மண்டலத்தில் ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத்திட்டம் செயல்படுத்துவதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 100 சதவீதம் அரசு மானியத்தில் கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் ஒரு பயனாளிக்கு 4 வார வயதுடைய நாட்டுக்கோழிகள் 50 எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பெண் பயனாளிகள் மட்டும் பயன்பெற தகுதியுடையவர்கள், அந்த பெண்கள் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தால் வழங்கப்பட்ட வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களின் பட்டியலில் இருக்க வேண்டும். அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், ஏற்கனவே கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள விலை இல்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் திட்டம், கோழி அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற்றிருத்தல் கூடாது. விதவைகள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

30 சதவீதம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த திட்டத்தில் பயன்பெறவிரும்பும் தகுதியுடைய பயனாளிகளின் விண்ணப்பங்களை இந்த மாதம் 26-ந்தேதிக்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் மட்டுமே வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story