பெரியகுளத்தில்: தீபாவளி சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி - தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு


பெரியகுளத்தில்: தீபாவளி சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி - தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 Nov 2018 3:00 AM IST (Updated: 12 Nov 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பெரியகுளம்,


பெரியகுளம், வடகரையை சேர்ந்தவர் சவுந்திரராஜன்(வயது52). இவரது மனைவி கிருஷ்ணவேணி(45), மகன் விவேக்(27). இவர்கள் 3 பேரும் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். கிருஷ்ணவேணி மகளிர் சுயஉதவிக்குழு நடத்தி தலைவியாக இருந்துள்ளார். இந்நிலையில் வடகரை, வடக்கு பூந்தோட்ட தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மனைவி கலாவதி(44) மற்றும் அப்பகுதியை சேர்ந்த சுமார் 25 பேர் சேர்ந்து கிருஷ்ணவேணியிடம் ரூ.10 லட்சம் கட்டியுள்ளனர்.

இந்த பணத்தை அவர்கள் கிருஷ்ணவேணியிடம் திருப்பி கேட்டபோது அவர்கள் வீட்டை விற்று தருவதாக கூறியுள்ளனர். ஆனால் பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கலாவதி மற்றும் சிலர் கிருஷ்ணவேணி வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டனர். அப்போது கிருஷ்ணவேணி, கணவர் சவுந்திரராஜன், மகன் விவேக் ஆகியோர் தகாத வார்த்தையில் பேசி, இனிமேல் பணம் கேட்டு வந்தால் உங்களை கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டியுள்ளனர்.

இது குறித்து கலாவதி கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணவேணி, சவுந்திரராஜன், விவேக் ஆகிய 3 பேர் மீது பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story