விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை


விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை
x
தினத்தந்தி 12 Nov 2018 4:15 AM IST (Updated: 12 Nov 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.4 1/4 கோடி மதிப்பீட்டிலான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் தயார் நிலையில் இருந்தும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிவகாசியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவின் போது விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அதிநவீன எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எந்திரம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.4 1/4 மதிப்பிலான அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தை ஒதுக்கீடு செய்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பே அனுப்பிவைத்தது. ஆனால் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் இந்த ஸ்கேன் எந்திரத்தை உரிய முறையில் பொறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காத நிலை நீடித்தது.

இதுபற்றி தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிர்வாகத்துக்கு தெரியவந்ததன் பேரில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தை பொறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் மின் இணைப்பு பெறுவதில் அரசு ஆஸ் பத்திரி நிர்வாகம் மெத்தனமாக இருந்ததால் மின் இணைப்பு பெறுவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளுக்கும் சுட்டிக்காட்டப்பட்டதன் பேரில் மின்வாரிய அதிகாரிகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் மின் இணைப்பு வழங்கப்பட்டு தற்போது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது.

ஆனாலும் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் இந்த ஸ்கேன் எந்திரத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் முடக்கநிலையிலேயே வைத்துள்ளது. தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வசதி செய்து தரவேண்டும் என்பதற்காகத்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு இந்த எந்திரத்தை வழங்கியுள்ளது. ஆனால் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் தமிழக அரசின் நல்ல நோக்கத்தை நிறைவேற்றாமல் தாமதப்படுத்திவருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுபற்றி அரசு சுகாதாரதுறை செயலர் கவனத்திற்கு கொண்டு சென்று எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரப்பட்டுள்ளது.


Next Story