அ.தி.மு.க. சார்பில் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. சார்பில் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 11 Nov 2018 10:45 PM GMT (Updated: 11 Nov 2018 9:56 PM GMT)

அ.தி.மு.க. சார்பில் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வைத்திலிங்கம் எம்.பி. கலந்துகொண்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து மருத்துவக்கல்லூரி பகுதி அ.தி.மு.க. வாக்குச்சாவடி நிர்வாகிகள் மற்றும் வாக்கு சேகரிப்பவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று தஞ்சை 48–வது வார்டு பர்மா காலனியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், வேளாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.துரைக்கண்ணு, கு.பரசுராமன் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கையேட்டினை வைத்திலிங்கம் எம்.பி., வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:–

தஞ்சை மாநகருக்கு பலவேறு வளர்ச்சி திட்டங்கள் செல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, தடையில்லா போக்குவரத்துக்கு பாலங்கள், எழில்மிகு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் மூலம் தஞ்சை நகரம் எழில்மிகு நகரமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை எல்லாம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அதனை சிறப்பாக செயல்படுத்தி வருபவர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இது மேலும் தொடரவும், தஞ்சை தொகுதி தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாறிடவும் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா வழிநடத்திடும். பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றார்.

பின்னர் வார்டு பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு இடைத்தேர்தல் பணிகள் குறித்து அவர் ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரை.திருஞானம், மாவட்ட மாணவர் அணிச்செயலாளரும், பால்வளத்தலைவருமான ஆர்.காந்தி, நிலவள வங்கித்தலைவர் துரை.வீரணன், மருத்துவக்கல்லூரி பகுதி செயலாளர் எஸ்.சரவணன், வட்டச்செயலாளர்கள் தர்ம.இளமுருகு, மனோகர், சரவணபவன், ராஜேஷ்கண்ணா மற்றும் கட்சி நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story