உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கும்பகோணத்தில் மாரத்தான் பந்தயம் திரளான மாணவர்கள் பங்கேற்பு
கும்பகோணத்தில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாரத்தான் பந்தயம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் கும்பகோணத்தில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி உடற்பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு முகாம்களும், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் தொடர்பான பிரசாரங்களும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் நேற்று மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
கும்பகோணம் செட்டி மண்டபம் நெடுஞ்சாலையில் மாரத்தான் பந்தயம் தொடங்கியது. கும்பகோணம் மீன்மார்க்கெட் பந்தய இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
மொத்தம் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த மாரத்தான் பந்தயத்தில் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக கும்பகோணம் செட்டி மண்டபம் பகுதியில் பந்தயத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் முகைதீன் அப்துல் காதர் உடன் இருந்தார். பந்தயத்தின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதல் பரிசாக ரூ.4 ஆயிரம், 2–வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3–வது பரிசாக ரூ.ஆயிரம் வழங்கப்பட்டது.