இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி


இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 11 Nov 2018 10:00 PM GMT (Updated: 11 Nov 2018 10:33 PM GMT)

இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பழனி,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுயஉதவி குழு வினருக்கான சிறப்பு பயிற்சி முகாம் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட மகளிர் சுயஉதவிக் குழு உதவி திட்ட அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார். காந்திகிராம பல்கலைக்கழக முதன்மை பயிற்றுனர் (விவசாயத்துறை) சாக்கின்தாஜ், இயற்கை முறை விவசாயம் குறித்தும், இயற்கை முறை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய மாநில ஊரக வாழ்வாதார இயக்க அதிகாரிகள், ரசாயன உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும் காய்கறிகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர். மேலும் இயற்கை முறை விவசாயம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அறிவுறுத்தினர்.


பயிற்சி முகாம் குறித்து மகளிர் சுய உதவிக்குழு அதிகாரிகள் கூறுகையில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு இயற்கை முறை விவசாயம் குறித்த பயிற்சி முகாம் வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது. முகாமில் பயிர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு, அவற்றை இயற்கை முறையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

பின்னர், அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கால்நடைகள் வளர்ப்பு, அவைகளை தாக்கும் நோய்கள், தடுக்கும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் தங்கள் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பயிர்சாகுபடி செய்வது குறித்தும், கால்நடைகள் பராமரிப்பு குறித்தும் விளக்கம் அளிப்பார்கள் என்றனர்.

Next Story