தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து திருப்பூருக்கு வருகை தரும் தொழிலாளர்கள் - தொழில்துறையினர் உற்சாகம்


தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து திருப்பூருக்கு வருகை தரும் தொழிலாளர்கள் - தொழில்துறையினர் உற்சாகம்
x
தினத்தந்தி 12 Nov 2018 4:30 AM IST (Updated: 12 Nov 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து திருப்பூருக்கு தொழிலாளர்கள் வருகை தந்து கொண்டிருப்பதால், தொழில்துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி போனஸ் வழங்குவது வழக்கம். இந்த போனசை பெற்றுக்கொண்டு தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பண்டிகையை கொண்டாட சென்று விடுவார்கள். இதன் பின்னர் விடுமுறை முடித்துக்கொண்டு தான் திருப்பூருக்கு வருவார்கள்.

இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 6-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. திருப்பூரில் வேலை செய்த தொழிலாளர்கள் போனஸ் தொகையை பெற்றுக்கொண்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதன் காரணமாக திருப்பூரில் பெரும்பாலான நிறுவனங்களில் ஆடை தயாரிப்பு நடைபெறவில்லை.

மேலும், பண்டிகை கால ஆடைகள் தயாரிப்பு முடிந்து தற்போது குளிர்கால ஆடை தயாரிப்பு தொடங்கி நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் விடுமுறை முடிந்து வராமல் இருந்ததால் தொழில்துறையினர் பலர் குளிர்கால ஆர்டர்களை எடுக்க தயங்கி வந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பண்டிகை விடுமுறை முடிந்து திருப்பூருக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.

இதில் வடமாநில தொழிலாளர்களே அதிகளவில் வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் திருப்பூர் ரெயில்நிலையத்தில் நேற்று தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது. வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரெயில்களிலும் தொழிலாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. தொழிலாளர்கள் கடந்த ஆண்டுகளில் 10 முதல் 15 நாட்கள் வரை விடுமுறைக்கு சென்று விடுவார்கள். இதனால் இந்த நாட்களில் பின்னலாடை நிறுவனங்களில் ஆடை தயாரிப்பு பாதிக்கும். இந்நிலையில் தற்போது பின்னலாடை தொழிலின் நிலையை கருத்தில்கொண்டு தொழிலாளர்கள் விரைவாக விடுமுறையை முடித்துகொண்டு, திருப்பூருக்கு திரும்ப வேண்டும் என தொழில்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த 6-ந் தேதி விடுமுறைக்கு சென்ற தொழிலாளர்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஓரளவிற்கு திருப்பூருக்கு வந்து விட்டனர். வடமாநில தொழிலாளர்களும் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். இன்று (திங்கட்கிழமை) பெரும்பாலான தொழிலாளர்கள் வந்து விடுவார்கள்.

இன்னும் ஒரு சில நாட்களில் திருப்பூரில் மீண்டும் ஆடை தயாரிப்பு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். குளிர்காலத்திற்கான ஆடை தயாரிப்பும் மும்முரமாக நடைபெற தொடங்கி விடும். இதனால் உற்சாகத்தில் உள்ளோம் என தொழில்துறையினர் தெரிவித்தனர்.

Next Story