மாவட்டம் முழுவதும் : 12 ஆயிரத்து 579 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர் - வினாக்கள் எளிதாக இருந்ததாக கருத்து


மாவட்டம் முழுவதும் : 12 ஆயிரத்து 579 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர் - வினாக்கள் எளிதாக இருந்ததாக கருத்து
x
தினத்தந்தி 12 Nov 2018 3:30 AM IST (Updated: 12 Nov 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 12 ஆயிரத்து 579 பேர் எழுதினர். வினாக்கள் மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல், 

அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்கு வசதியாக 66 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு மையத்துக்கும் ஒரு முதன்மை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தனர். மேலும் நடமாடும் குழு அலுவலர்கள், பறக்கும் படையினர் தேர்வு மையங்களை கண்காணித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 12 ஆயிரத்து 579 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் பெறப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தில் நடந்த குரூப்-2 தேர்வை கலெக்டர் டி.ஜி.வினய் பார்வையிட்டார்.

குரூப்-2 தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக திண்டுக்கல்லில் தேர்வு எழுதியவர்கள் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து விவரம் வருமாறு:-

வினோதினி, பெருமாள்கோவில்பட்டி:- நான் குடும்பத்தலைவியாக உள்ளேன். டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலையில் சேர வேண்டும் என்பது தான் எனது கனவு. இதற்காக வீட்டு வேலைகளை முடித்தவுடன் படிக்க ஆரம்பித்துவிடுவேன். குரூப்-2 தேர்வுக்காக கடந்த சில மாதங்களாக கடுமையாக உழைத்தேன். இந்த ஆண்டு குரூப்-2 தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. அதிக மதிப்பெண்கள் எடுத்து, எப்படியும் அரசு பணியில் சேர்ந்துவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

கார்த்திகேயன், திண்டுக்கல்:- நான் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படித்து வருகிறேன். முதன்முறையாக குரூப்-2 தேர்வு எழுதினேன். இதனால் பதற்றமாக இருந்தது. கல்லூரியில் உள்ள பாடத்திட்டங்களை படித்துக்கொண்டே, அரசு தேர்வுக்கு தயாராவது கடினமாக இருந்தது. இதனால், குரூப்-2 தேர்வுக்கு படிக்க முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. எனினும் தேர்வு எளிதாகத்தான் இருந்தது. இந்த தேர்வில் மத்திய அரசு திட்டங்கள் சம்பந்தமான வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. தற்போது எவ்வாறு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுத வேண்டும் என்று ஒரு தெளிவு கிடைத்துள்ளது. அடுத்த முறை கண்டிப்பாக அரசு தேர்வில் வெற்றி பெறுவேன்.

நித்யகல்யாணி, விராலிப்பட்டி:- நான் கல்லூரியில் படித்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக அரசு தேர்வுகளை தவறாமல் எழுதி வருகிறேன். தற்போது நடந்த குரூப்-2 தேர்வில், கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிதாக இருந்தன. அனைத்தும் தெரிந்த வினாக்களாகவே இருந்தன. நிச்சயம் இந்த தேர்வில் வெற்றி பெற்றுவிடுவேன்.

ரமாதேவி, செட்டியப்பட்டி:- குரூப்-2 தேர்வில் கேட்கப்பட்டு இருந்த வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிதாக இருந்தன. ஒரு சில வினாக்கள் சற்று யோசித்து விடையளிக்கும்படி இருந்தன. இதனால் தேர்வுக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. தேர்வை நன்றாக எழுதி உள்ளேன்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வினை மாற்றுத்திறனாளிகள் சிலர் எழுதினர். அதன்படி பழனி அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் மேல்நிலைப்பள்ளியில் கால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி அம்சவேணி தேர்வு எழுதினார்.

Next Story