காட்பாடியில் ஆசிரியையிடம் நூதனமுறையில் 16 பவுன் சங்கிலி அபேஸ் போலீஸ் போன்று நடித்து மர்மநபர்கள் துணிகரம்
காட்பாடியில் போலீஸ் போன்று நடித்து நூதனமுறையில் அரசுப்பள்ளி ஆசிரியையிடம் 16 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காட்பாடி,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
காட்பாடி துரைநகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 53), திருவலத்தில் உள்ள மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெயந்தி (52), கொணவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஜெயந்தி தினமும் வீட்டில் இருந்து சித்தூர் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல் ஜெயந்தி வீட்டில் இருந்து சித்தூர் பஸ் நிறுத்ததுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மர்மநபர்கள் திடீரென ஜெயந்தியை வழிமறித்து, தங்களை போலீஸ் என்று கூறி அறிமுகப்படுத்தி உள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் ஜெயந்தியிடம் ‘நாங்கள் ‘மப்டி’யில் உள்ளோம். நீங்கள் இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு தனியாக நடந்து சென்றால் யாராவது உங்களை பின்தொடர்ந்து வந்து நகைகளை பறித்து சென்று விடுவார்கள். எனவே நீங்கள் அணிந்துள்ள நகைகளை கழற்றி கைப்பையில் பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பிய ஜெயந்தி தான் அணிந்திருந்த 16 பவுன் எடையுள்ள 2 சங்கிலியை கழற்றி உள்ளார். அப்போது 2 பேரும் ‘நகைகளை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் பேப்பரில் மடித்து கொடுப்பதாக கூறி நகைகளை வாங்கி உள்ளனர். பின்னர் ஒரு பொட்டலத்தை ஜெயந்தி வைத்திருந்த கைப்பையில் வைத்துவிட்டு அங்கிருந்து இருவரும் சென்று விட்டனர்.
சிறிதுதூரம் நடந்து சென்ற ஜெயந்தி கைப்பையில் வைத்த பொட்டலத்தை எடுத்து பிரித்து பார்த்தார். அதில், தங்கசங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்கள், கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.