வாணியம்பாடி அருகே தும்பேரியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
வாணியம்பாடி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாணியம்பாடி,
வாணியம்பாடியிலிருந்து திம்மாம்பேட்டை செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் தும்பேரி ஊராட்சி உள்ளது. குப்பம் உள்பட ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள் இந்த வழியாக செல்கின்றன. இங்கு பிரதான சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதன் அருகில் பள்ளிக்கூடங்கள், கோவில்கள் உள்ளன. மாணவ, மாணவிகள் இந்த வழியாகத்தான் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
மாலை நேரங்களில் டாஸ்மாக் கடையில் மது குடிப்பவர்கள் மாணவிகள் செல்லும்போது ஆபாச வார்த்தைகளை பேசுகின்றனர். மேலும் போதையில் அரைகுறை ஆடையுடன் சாலையில் கிடக்கின்றனர். சில நேரங்களில் போதை நபர்கள் ரோட்டில் கட்டிப்புரள்கின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் மாணவ, மாணவிகளை அச்சுறுத்துவதாக உள்ளது. பெண்களும் அந்த வழியாக செல்லும்போது ஒரு வித பயத்துடனேயே செல்கின்றனர். எனவே இந்த கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பல மாதங்களாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் டாஸ்மாக் அதிகாரிகள் எடுக்காமல் உள்ளனர். தொடர்ந்து போதை நபர்களால் இடையூறு ஏற்பட்டு வந்த நிலையில் கொதிப்படைந்த பொதுமக்கள் நேற்று காலை டாஸ்மாக் கடை முன் திரண்டு அதனை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. தகவல் அறிந்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கை குறித்து முறைப்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் திரும்பினர்.