ஈமுகோழி நிறுவனம் நடத்தி: ரூ.1½ கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
ஈமுகோழி நிறுவனம் நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காமநாயக்கன் பாளையத்தில் ஜே.பி.ஆர். ஈமுகோழி நிறுவனத்தை அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், பத்மநாபன், ராஜேஸ்வரன் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்து நடத்தி வந்தனர். ஈமு கோழி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகவட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறியதால், கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தனர்.
இந்தநிலையில், ரூ.1 கோடியே 66 லட்சத்தை ஈமு கோழி நிறுவனம் ஏமாற்றியுள்ளதாக பணம் செலுத்தியவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் செய்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், ராஜேஸ்வரன், பத்மநாபன் ஆகியோரை கைது செய்தனர். வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு கோர்ட்டில் (டேன்பிட்) இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின் போது கடந்த ஒரு ஆண்டாக கோர்ட்டில் ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாக இருந்தார். இதைதொடர்ந்து நீதிபதி பாபு, தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு உத்தரவு பிறப்பித்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, ஜெயக்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story