நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 30 ஆவின் பார்லர்கள் அமைக்க திட்டம் தலைவர் என்.சின்னத்துரை தகவல்


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 30 ஆவின் பார்லர்கள் அமைக்க திட்டம் தலைவர் என்.சின்னத்துரை தகவல்
x
தினத்தந்தி 13 Nov 2018 4:30 AM IST (Updated: 13 Nov 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 30 ஆவின் பார்லர்கள் அமைக்கப்பட உள்ளது என்று அதன் தலைவர் என்.சின்னத்துரை தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

தமிழகத்தில் நபார்டு வங்கி நிதிஉதவி மூலம் 100 சதவீதம் மானியத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆவின் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதுதொடர்பாக ஆவின் நிறுவன பொது மேலாளர் ரங்கநாததுரை, நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை ஆகியோர் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.

பின்னர் என்.சின்னத்துரை நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள நெல்லை ஆவின் நிறுவனம் மேம்படுத்தப்படுகிறது. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ரூ.50 லட்சம் செலவில் நவீன ஆவின் பாலகம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 30 ஆவின் பார்லர்கள் அமைத்து பொதுமக்களுக்கு தரமான பால் மற்றும் உபபொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சம் செலவில் கப்புகளில் தயிர் நிரப்பும் எந்திரம் அமைக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் முதல் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விலையில்லா கறவை மாடு திட்டத்தின் கீழ் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் விதவை பெண்கள் பயன்பெறும் வகையில் 5 ஆயிரத்து 158 கறவைமாடுகள் வழங்கப்பட்டு தினமும், சுமார் 4 ஆயிரத்து 600 லிட்டர் பால் நெல்லை ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதலை 1 லட்சம் லிட்டராக உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஒன்றியத்தில் சராசரியாக தினமும் 42 ஆயிரத்து 500 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உபரியான பால் திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. தினசரி உள்ளூர் விற்பனையை 42 ஆயிரத்து 500 லிட்டரில் இருந்து 60 ஆயிரம் லிட்டராக உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையின்றி 31.10.2018 வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு தள்ளுபடி விலையில் கால்நடை தீவனம் சுமார் 220 டன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒன்றியம் 2017-18-ம் நிதியாண்டில் ரூ.84.2 லட்சமும், 2018-19-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.32.52 லட்சமும் லாபம் ஈட்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story