கனடா நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி: கோவை பட்டதாரி வாலிபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி - கமிஷனர் அலுவலகத்தில் புகார்


கனடா நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி: கோவை பட்டதாரி வாலிபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி - கமிஷனர் அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 13 Nov 2018 3:30 AM IST (Updated: 13 Nov 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கோவை பட்டதாரி வாலிபர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை,

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரன் (வயது33). இவர் கனடாவில் உள்ள பிரபல ஓட்டலில் வேலை செய்து வருவதாகவும், அந்த ஓட்டலில் வேலை வாங்கித்தருவதாகவும் கோவை பட்டதாரி வாலிபர்களிடம் கூறியுள்ளார். இதற்கான ஆவணங்களை காண்பித்ததும் கோவை பட்டதாரி வாலிபர்கள் உண்மை என்று நம்பினார்கள்.

தங்களுக்கு எப்படியும் வேலை கிடைக்கும் என நம்பி அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் கனடாவில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கோவை வாலிபர்கள் பணத் தை திருப்பி கேட்டுள்ளனர். அப்போது உமா மகேஸ்வரன் தன்னிடம் இந்திய மதிப்புக்கு ரூ.80 கோடி மதிப்புக்கு ‘யூரோ’ டாலர் உள்ளது. அதனை மாற்றி தருகிறேன் என கூறி உள்ளார். அதன் பின்னர் வங்கி காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அது பணம் இல்லாமல் திரும்பி விட்டது. இதனால் பணத்தை தருமாறு மீண்டும் கேட்டுள்ளனர்.

கோவை வாலிபர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் உமா மகேஸ்வரன் அவர்களை மிரட்ட தொடங்கி உள்ளார். தன்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். பணம் வாங்கிய உமா மகேஸ்வரன் கனடாவில் வேலை பார்க்கவில்லை என்பதும் அவர் தங்களிடம் காண்பித்தது அங்கு வேலை பார்ப்பதாக தயாரித்த போலி ஆவணம் என்றும் கோவை வாலிபர்களுக்கு தெரிய வந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த வாலிபர்கள் நேற்று கோவை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பெருமாளிடம் புகார் மனு அளித்தனர்.

அதில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த வேலூர் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

புகார் மனு கொடுத்தவர்களில் ஒருவரான தீபன் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் உள்ள வர்த்தக நிறுவனத்தில் உள்ள கண்ணாடி கடையில் விற்பனை பிரிவு ஊழியராக வேலை செய்து வந்தேன். அப்போது கண்ணாடி வாங்க வந்த உமாமகேஸ்வரன், கனடாவில் உள்ள ஒரு ஓட்டலில் மாதம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் சம்பளத்தில் வேலை காலியாக இருப்பதாகவும், கணினி ஆபரேட்டர் வேலைக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார். இதனை நம்பி ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்தை கொடுத்தேன். என்னைப்போல கோவையை சேர்ந்த பட்டதாரிகள் மொத்தம் ரூ.13 லட்சம் செலுத்தி ஏமாந்துள்ளனர். சேலத்தை சேர்ந்த 2 பேர் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர். இதேபோல் கோ வைப்பகுதியை சேர்ந்த மேலும் பலர் ஏமாந்து இருக்கலாம் என்று தெரிகிறது. போலீஸ் அதிகாரிகள் உமாமகேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து எங்களது பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டுக்கு செல்வோம் என்ற நம்பிக்கையில் கோவையில் பார்த்த வேலையையும் விட்டுவிட்டு, பணத்தையும் இழந்து மிகவும் அவதிப்படுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உமா மகேஸ்வரன் ஏராளமானவர்களிடம் பணத்தை மோசடி செய்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். ஹாங்காங் நாட்டில் இருந்துகொண்டு, பட்டதாரி வாலிபர்களுக்கு கனடாவில் இருந்து அனுப்புவது போல் இ-மெயில் அனுப்பி உள்ளார். பணத்தை இழந்த பட்டதாரி வாலிபர்கள், கனடாவில் வேலை கிடைக்கும் என்று உமாமகேஸ்வரன் கூறிய ஓட்டல் நிர்வாகத்திடம் விசாரித்தபோது, அப்படி வேலைக்கு யாரையும் அழைக்கவில்லை என்றும், உமாமகேஸ்வரன் மோசடி செய்துள்ளார் என்றும் கூறியுள்ளனர். இதற்கிடையில் உமா மகேஸ்வரன் தலைமறைவாகி விட்டார்.இதைத்தொடர்ந்துதான் பாதிக்கப்பட்ட வாலிபர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். இந்த மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story