சுப்ரீம் கோர்ட்டு விதித்த கடும் நிபந்தனைகள் எதிரொலி: பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டன


சுப்ரீம் கோர்ட்டு விதித்த கடும் நிபந்தனைகள் எதிரொலி: பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டன
x
தினத்தந்தி 13 Nov 2018 3:45 AM IST (Updated: 13 Nov 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு விதித்த கடும் நிபந்தனைகளால் சிவகாசி பகுதியில் உள்ள 1000–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் நேற்று முதல் காலவரையின்றி மூடப்பட்டன. இதனால் இந்த தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி உள்ள 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 1000–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. கடந்த மாதம் பட்டாசு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தீபாவளியன்று பட்டாசு வெடிக்கவும் நேரக்கட்டுபாடுகளை விதித்தது. இதனால் பட்டாசு விற்பனை வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி? என்பது குறித்த கருத்தரங்கம் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டான்பாமா சங்க தலைவர் ஆசைதம்பி, பொதுச் செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சாக்ரட்டீஸ், டிப்பா சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் ராஜேந்திரராஜா, பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இளங்கோ உள்பட பலர் பேசினர். பட்டாசு ஆலை உரிமையாளர்கள், பட்டாசு கடைக்காரர்கள் என 500–க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

முடிவில் டான்பாமா சங்க பொதுச்செயலாளர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:–

விருதுநகர் மாவட்டத்தில் 1000–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும் இந்தியாவில் மற்ற பகுதியில் 500–க்கும் மேற்பட்ட ஆலைகளும் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு விதித்த கடும் நிபந்தனைகள் எதிரொலியாக தற்போது எந்த பட்டாசு ஆலையும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை இல்லை என்று கூறிவிட்டு, பல நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதவை.

பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்தக்கூடாது என்று கூறி உள்ளது. ஆனால் அது இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியாது. அப்படி தயாரித்தால் அது வெளிச்சம் கொடுக்காத பட்டாசாக இருக்கும். இதனால் குழந்தைகள் அதிகம் விரும்பும் கம்பி மத்தாப்பூ, சாட்டை, சக்கரம், பென்சில், மத்தாப்பூ போன்றவை தயாரிக்க முடியாது.

60 சதவீத பட்டாசுகள் ஒளி தரக்கூடியவை. இவை தயாரிக்க பேரியம் நைட்ரேட் அவசியம். சரவெடிக்கு தடை விதித்துள்ளது. 28 சரம் முதல் 10 ஆயிரம் சரம் வரை நாம் தயாரித்து வருகிறோம். இதற்கு என ஒலி அளவு வரையறை உண்டு. இந்த வரையறுக்கு உட்பட்டுதான் சரவெடிகளை தயாரித்து வந்தோம். ஆனால் தற்போது சுப்ரீம் கோர்ட்டு சரவெடிக்கு தடை விதித்துள்ளது.

பசுமை பட்டாசு என்ன? என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் புகையை குறைக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். அதற்கான ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தான் எங்களுக்கு கிடைக்கும்.

அதன் பின்னர்தான் பசுமை பட்டாசுகள் குறித்து முடிவு செய்யப்படும். 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தீர்ப்பு உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமெரிக்காவில் கூட இந்த மாதிரியான விதிகள் கிடையாது.

சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஆலைகளை நாங்களே முன்வந்து மூட முடிவு செய்துள்ளோம். இது குறித்து அரசுக்கும், தொழிலாளர் நலத்துறைக்கும் கடிதம் மூலம் தெரிவிக்க உள்ளோம்.

சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த தொழில் காப்பாற்றப்படும். எங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துக்கூற முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த தீபாவளி தினத்தன்று நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் 2000–க்கும் அதிகமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை மன்னித்து மாநில அரசு விடுதலை செய்ய வேண்டும். நேரக்கட்டுப்பாடு காரணமாக இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்த நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 3 வருடங்களில் பட்டாசு தொடர்பான வழக்குக்கு மட்டும் பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.

மத்திய அரசு இந்த தொழிலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அதனால் மத்திய அரசு மூலம் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இதுதொடர்பான வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 11–ந்தேதி நடக்க இருக்கிறது. இதில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது டான்பாமா சங்க தலைவர் ஆசைதம்பி, சோனி கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த முடிவை தொடர்ந்து பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த முடிவால் பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் இருக்கும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.


Next Story