பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் திறப்பாளர்கள் காத்திருப்பு போராட்டம்
பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் திறப்பாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கலூர்,
பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக குடிநீர் திறப்பாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின்போது, தங்களுக்கு வழங்கவேண்டிய 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கவேண்டும், 2017–ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனே வழங்கவேண்டும் என்று தெரிவித்தனர்.
இதற்கு சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ரங்கராஜ், மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன், பொங்கலூர் ஒன்றிய பொறுப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள். இதில் ஒன்றிய அளவில் இருந்து வந்திருந்த ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரி(கிராம ஊராட்சி) அவர்களிடம் பேச்சு நடத்தியதை தொடர்ந்து ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.