இரும்பாலை அருகே பள்ளி மாணவனுக்கு ரத்த புற்றுநோய் நிதி உதவி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு
இரும்பாலை அருகே ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவனுக்கு நிதி உதவி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
சேலம்,
சேலம் இரும்பாலை அருகே உள்ள தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சந்திரகுமார். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி கலையரசி. இவர்களுக்கு ராகுல்குமார் (வயது 15), லோகேஷ் (13) என 2 மகன்கள் உள்ளனர். ராகுல்குமார் 9-ம் வகுப்பும், லோகேஷ் 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகேசுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் அவனுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் லோகேசுக்கு ரத்த புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவனுக்கு சிகிச்சைக்காக இதுவரை சுமார் ரூ.7 லட்சம் வரை செலவு செய்யப்பட்டது.
நேற்று சந்திரகுமார் தன்னுடைய மனைவி, மகன் லோகேசுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வறுமையின் காரணமாக எனது மகனுக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க சிரமமாக உள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இதற்காக ரூ.12 லட்சம் வரை செலவு ஆகும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்காக நிதி உதவி வழங்க வேண்டும். அல்லது யாரேனும் உதவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story