மதுரை அருகே மூச்சை திணறடித்து காவலாளி கொலை


மதுரை அருகே மூச்சை திணறடித்து காவலாளி கொலை
x
தினத்தந்தி 13 Nov 2018 5:15 AM IST (Updated: 13 Nov 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

முகத்தை போர்வையால் மூடி டேப்பை சுற்றியதால் மூச்சை திணறடித்து காவலாளி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

நாகமலைபுதுக்கோட்டை,

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45). இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். அங்கு துவரிமானைச் சேர்ந்த நித்யானந்தம் (65) என்பவர் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் நித்யானந்தம் ஒர்க்‌ஷாப்பில் பணியில் இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் நித்யானந்தத்தை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

நித்யானந்தம் உயிருக்கு போராடிய போது, அந்த மர்ம நபர்கள் அவரது கை, கால்களில் பிளாஸ்டிக் டேப்பை சுற்றி கட்டிப் போட்டனர். மேலும் அங்கிருந்த போர்வையை அவரது தலையில் போர்த்தி முகத்தை மூடி, கழுத்தை டேப்பை சுற்றி கட்டிவிட்டனர். சற்று நேரத்தில் மூச்சை திணறிடித்து நித்யானந்தம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.

இதனையடுத்து நேற்று காலை ஒர்க்‌ஷாப்புக்கு வந்த கார்த்திகேயன், காவலாளி நித்யானந்தம் டேப் சுற்றப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து காவலாளி நித்யானந்தத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்தார். கொலையாளிகள் யார், எதற்காக நித்யானந்தத்தை கொலை செய்தனர், முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story