புரோக்கரை கத்தியால் கீறி 10 பவுன் நகைகள் பறிப்பு முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு


புரோக்கரை கத்தியால் கீறி 10 பவுன் நகைகள் பறிப்பு முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Nov 2018 4:30 AM IST (Updated: 13 Nov 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பொன்மலையில் புரோக்கரை கத்தியால் கீறி 10 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி தென்னூரை சேர்ந்தவர் சேத்தன்ராஜ்கோர் (வயது39). மர புரோக்கர். இவர் நேற்று மாலை திருவெறும்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் பொன்மலை வழியாக திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். பொன்மலை ‘சி’ டைப் சாலையில் வந்து கொண்டிருந்த போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

பின்னர் அவர்கள், சேத்தன் ராஜ்கோரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து கத்தியால் அவரது கையில் கீறினர். அவர் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த பிரேஸ்லேட் என 10 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பொன்மலை போலீஸ் நிலையத்தில் சேத்தன்ராஜ்கோர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாநகர துணை போலீஸ் கமிஷனர் மயில் வாகனனும் நேரில் சென்று விசாரித்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை என சேத்தன் ராஜ்கோர் போலீசாரிடம் தெரிவித்தார். சம்பவம் நடந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். மேலும் அந்த பகுதியில் பாழடைந்த ரெயில்வே கட்டிடங்கள் பல உள்ளன.

அதில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் அந்த பகுதி வழியாக வந்த அவரிடம் நகைகளை பறித்து சென்ற மூகமூடி கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சேத்தன் ராஜ்கோரின் கையில் கத்தியால் கீறியதற்கான காயம் இருந்தது. செல்போன் பேசியபடி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த போது 3 பேரும் மறித்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரது செல்போனை வாங்கி போலீசார் பார்வையிட்டனர். இதில் சம்பவம் நடந்த மாலை 4.30 மணிக்கு முன்பான அழைப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story