வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 Nov 2018 10:00 PM GMT (Updated: 12 Nov 2018 8:56 PM GMT)

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இந்தநிலையில் பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், சிலரை மட்டும் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் சொந்த வீடு இல்லாமல் தவித்து வருகிறோம். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊருக்கு மிக அருகில் தார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் நோய் தாக்கி இதுவரை 4 பேர் இறந்துள்ளனர். போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்த ஆலை மூடப்பட்டது.
இந்தநிலையில் அங்கு புதிய எந்திரங்களை பொருத்தி, ஆலையை மீண்டும் இயக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு புகையால் எங்கள் ஊரில் பலருக்கு ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உள்பட பல நோய்கள் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த ஆலையை மீண்டும் திறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் குத்துபுதீன் தலைமையில் அந்த கட்சியினர் கொடி பிடித்தவாறு கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, சிலரை மட்டும் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

அவர்கள் கொடுத்த மனுவில், ஆயுள் தண்டனை பெற்று தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர்கள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் இதுவரை சுமார் 1,000 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த 47 கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

நிலக்கோட்டை அருகே உள்ள குழிச்செட்டிபட்டி பகுதியில் 13 பேர், நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாகவும், அதனை உடனே அகற்ற வேண்டும் என்றும் தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் தங்களுடைய கோரிக்கை குறித்து கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு சென்றனர். 

Next Story