தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு: ஒன்றிய அலுவலகத்தை தே.மு.தி.க.வினர் முற்றுகை


தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு: ஒன்றிய அலுவலகத்தை தே.மு.தி.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 13 Nov 2018 4:30 AM IST (Updated: 13 Nov 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி திருத்துறைப்பூண்டியில் தே.மு.தி.க.வினர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பனையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டி தே.மு.தி.க.வினர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தலைமை தாங்கினார்.

விஜயகாந்த் மன்ற நிர்வாகிகள் கிரி, ராஜேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் கார்த்தி, மாவட்ட பிரதிநிதி அய்யப்பன், மாவட்ட பொருளாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு முறைகேட்டை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தின்போது தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் தொடர்பாக பனையூரில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை தே.மு.தி.க.வினர் பிடுங்கி எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குணா, ராஜேந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் 2 மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் நீடித்தது. 

Next Story