‘கஜா’ புயலை எதிர்கொள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும்


‘கஜா’ புயலை எதிர்கொள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 12 Nov 2018 10:30 PM GMT (Updated: 12 Nov 2018 9:30 PM GMT)

காரைக்காலில் ‘கஜா’ புயலை எதிர்கொள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படவேண்டும் என புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

காரைக்கால்,

சென்னையில் இருந்து 740 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் வருகிற 15-ந் தேதி(வியாழக்கிழமை) சென்னைக்கும், நாகப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் கேசவன் தலைமை தாங்கினார். சார்பு கலெக்டர் விக்ராந்த்ராஜா மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், கடலோர காவல்படை கமாண்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘கஜா’ புயல் வருகிற 15-ந் தேதி கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலை எதிர்கொள்ள காரைக்காலில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் குழுவாக இணைந்து செயல்படவேண்டும். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருக்க மீன்வளத்துறை அறிவுறுத்த வேண்டும்.

மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ள மீனவர்களை உடனே கரை திரும்ப வலியுறுத்தவேண்டும். கடற்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும். பொதுப்பணித்துறை, கொம்யூன்களில் பழுதாகி உள்ள ஜெனரேட்டர்களை உடனே பழுது நீக்கி தாயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனுக்குடன் சரி செய்யவேண்டும். அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அரிசி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் கேசவன் பேசுகையில், ‘கஜா’ புயலை எதிர்கொள்ள, அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும். அனைவரும் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற வேண்டும். மின்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் குறைகளை சரி செய்து, மக்கள் பாதிக்காதவாறு பணியாற்ற வேண்டும் என்றார்.

Next Story