கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் கலெக்டரிடம் அனைத்து பேராயர்கள் மனு


கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் கலெக்டரிடம் அனைத்து பேராயர்கள் மனு
x
தினத்தந்தி 13 Nov 2018 4:15 AM IST (Updated: 13 Nov 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிறிஸ்தவ ஐக்கிய பேரவை, அனைத்து பேராயர்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை, அனைத்து பேராயர்கள் சார்பில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி.ஜான் நிக்கல்சன், கிருபாகரன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் சமீப காலமாக கிறிஸ்தவர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரிக்கிறது. வழிபாட்டு தலங்களை சேதப்படுத்துகின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பது கிடையாது. கிறிஸ்தவ கூட்டங்கள், விழாக்கள் சார்ந்த பவனி நடத்த விண்ணப்பிக்கும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அனுமதி மறுக்கப்படுகிறது.

கன்னியாகுமரியில் பன்னாட்டு சரக்கு மாற்று முனையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை வாபஸ் பெற வேண்டும். ஆலயங்கள் கட்டுவதற்கும், பழுது பார்ப்பதற்கும் அனுமதி கேட்கும் போது அதற்கான மனு பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு பின்னர் அனுமதி மறுக்கப்படும் நிலை குமரி மாவட்டத்தில் உள்ளது. அதற்கு தீர்வு காண வேண்டும். முட்டம் கலங்கரை விளக்கு பகுதியில் பல ஆண்டுகளாக அமைந்திருந்த குருசடி மத்திய அரசுக்கு சொந்தமான இடம் என்று கூறி அடியோடு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பல சம்பவங்கள் மாவட்டத்தில் நடந்துள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலயங்களில் குடில் கள் அமைத்தும், கிறிஸ்துமஸ் பவனிகள் நடத்தியும் மக்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த நாட்களில் எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு கூடுதல் பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்துமஸ் புத்தாண்டு வழிபாடு கொண்டாட்டத்திற்கும் தகுந்த பாதுகாப்பு தர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story