விதை விற்பனையில் மோசடி செய்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை பி.ஆர்.பாண்டியன் பேட்டி


விதை விற்பனையில் மோசடி செய்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 6:46 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் விதை விற்பனையில் மோசடி செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா, தனது கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றுவோம் என அறிவித்து விவசாயிகளின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள். இதுநாள் வரையிலும் அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றி வஞ்சித்து விட்டார்கள்.

2016-ல் சுப்ரீம் கோர்ட்டில் பஞ்சாப் விவசாயிகள், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தனர். அதற்கு எழுத்து பூர்வமாக நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, கொள்கை பூர்வமாக அதனை ஏற்க மறுப்பதாக தெரிவித்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய வேளாண் துறை மந்திரி ராதாமோகன்சிங் சென்னையில் நிருபர்களிடம் கூறும்போது, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை மோடி நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு விவசாயிகளை ஏமாற்ற முயற்சிக்கும் மோசடி நடவடிக்கையாகும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மற்றும் இயற்கை இடர்பாடுகளை தாங்கி நல்ல விளைச்சல் தரக்கூடிய நீண்ட கால ஒரு போக சம்பா சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகமான 1009-ஐ விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இது 150 நாட்களில் தை மாதம் அறுவடைக்கு வரக்கூடியது.

ஆனால் இந்த ஆண்டு குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தனியார் கடைகளில் 1009 என்ற பெயரில் குறுகிய கால விதைகளை வழங்கி மோசடி செய்துள்ளனர். இதனை விதைத்து சாகுபடி செய்துள்ள நிலங்களில் ஐப்பசி மாதமான தற்போதே கதிர் வந்து பெரும் மழையில் அழியக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு, வேளாண்மை துறை உரிய விசாரணை செய்து மோசடி செய்த விதை உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மன்னார்குடி ஒன்றிய தலைவர் மனோகரன் உடன் இருந்தார்.

Next Story