குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை


குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2018 4:30 AM IST (Updated: 14 Nov 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை கற்பழித்த வழக்கில் ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த கடைக்கு தொழில் விசயமாக அடிக்கடி வந்த திருபுவனம் காத்தாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பட்டுப்புடவை வியாபாரி சின்னப்பா(வயது41) என்பவர், அந்த பெண்ணை தனது வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து கற்பழித்துள்ளார்.

இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், துணைச் செயலாளர் அன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் மில்லர்பிரபு, தலைவர் மணிமாறன் மற்றும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்கள், திருபுவனம் பகுதி மக்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.

அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருபுவனம் பகுதியை சேர்ந்த தந்தையை இழந்த 21 வயது இளம்பெண் கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார். அந்த கடை உரிமையாளரின் நண்பர் கடந்த 7-ந் தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தனது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறி அழைத்துள்ளார்.

அவர் செல்ல மறுத்தும் நான் உன் தந்தைக்கு சமமானவன். உன் நலனில் மிகுந்த அக்கறை உள்ளவன் என்று பேசி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் 3 மணிநேரம் கழித்து அந்த பெண்ணை அவரது வீட்டில் விட்டு சென்றுள்ளார். பதற்றத்துடன் காணப்பட்ட அந்த பெண், குளியல் அறைக்கு சென்றபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதை கண்டு அந்த பெண்ணின் தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்றவர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னப்பா கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் டாக்டர்கள் கூறும்போது ஒருவர் மட்டும் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை தெரிவித்தனர்.

எனவே அவர் மட்டும் இந்த செயலில் ஈடுபடவில்லை. கடை உரிமையாளரின் பேச்சுகளும், நடவடிக்கைகளும் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரையும் இந்த வழக்கில் சேர்த்து தீவிர விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கு 9 தையல் போடப்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கை மனுவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கும் நேரில் சென்று அளித்தனர்.

Next Story