மன்னார்புரத்தில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல்; 110 பேர் கைது


மன்னார்புரத்தில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல்; 110 பேர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2018 4:30 AM IST (Updated: 14 Nov 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மன்னார்புரத்தில் மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு ரூ.4 ஆயிரம் கருணைத்தொகை வழங்கிட வேண்டும், ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் மின்வாரியமே பணிக்கு அமர்த்தி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும் என்றும், இ.பி.எப். வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பின்படி நிரந்தரம் பெறாத ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்திட வேண்டும். காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும். மின் வினியோகத்தை தனியாரிடம் வழங்காமல் தொடர்ந்து பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தை நேற்று நடத்தினர்.

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சி.ஐ.டி.யு) சார்பில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக மின்வாரிய அலுவலகம் முன்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் திரண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தை சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத் தொடங்கி வைத்தார்.

மறியல் போராட்டத்தை வாழ்த்தி மாநில செயலாளர் பன்னீர்செல்வம்(சி.ஒ.டி.இ.இ.), திட்ட செயலாளர் செல்வராசு, மாநில துணை செயலாளர் இருதயராஜ் (டி.என்.பி.இ.ஓ) ஆகியோர் பேசினர். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 110 பேரை போலீஸ் உதவி கமிஷனர் சிகாமணி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், முருகவேல் மற்றும் போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story