இலவச பொருட்கள் குறித்து ரஜினிகாந்தின் கருத்து சரியானது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


இலவச பொருட்கள் குறித்து ரஜினிகாந்தின் கருத்து சரியானது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 13 Nov 2018 11:15 PM (Updated: 13 Nov 2018 10:10 PM)
t-max-icont-min-icon

இலவச பொருட்கள் குறித்து ரஜினிகாந்தின் கருத்து சரியானது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

உலக அளவில் இந்தியா தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இதில் 90 சதவீதம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உற்பத்தியாகின்றன. தமிழகத்தில் குமரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் கல்லுக்கட்டி என்ற கிராமத்தை தென்னை வளர்ச்சி வாரியம் மாதிரி கிராமமாக தத்தெடுத்துள்ளது.

ரஜினிகாந்தை பொறுத்தவரை எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசக்கூடியவர் அல்ல. அவர் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை. கடந்த ஆண்டுகளில் அரசியல் குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்க வில்லை. ஆனால் தற்போது அவர் தினம், தினம் கருத்துக்கள் கூறி வருகிறார். ஓட்டுக்காக இலவச பொருட்கள் வழங்கக்கூடாது என ரஜினிகாந்த் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சரியானது. மக்களை ஏமாற்றி அரசியல் செய்யக்கூடாது. இலவசங்கள் கொடுப்பதால் தொழில் உற்பத்திதிறன் பாதிக்கும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவிப்பது குறித்து கவர்னர்தான் முடிவு செய்ய வேண்டும். அவருக்கு நான் கட்டளை பிறப்பிக்க முடியாது. இன்று அவர்களுடைய விடுதலைக்காக பேசுபவர்கள், இதற்கு முன்பு ஆட்சி பொறுப்பில் இருந்தபோது என்ன செய்தார்கள்? ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். அப்படி என்றால் ஜெயலலிதா அவர்களை அடக்கி வைத்திருந்தாரா?. மறைந்த தலைவர்களை கொச்சைபடுத்தக்கூடாது.

நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வருமா? என்று கேட்கிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அதிர்வு இருப்பதாக கூறியது பற்றி ஆய்வு செய்ய ஐ.ஐ.டி. நிபுணர் குழுவை அறிவுறுத்தி உள்ளேன். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளிக்கு இயக்குவது குறித்த முழுமையான விவரம் தெரியவில்லை. நாகர்கோவில் ரெயில் நிலையத்தை 60 ஏக்கர் நிலத்தில் விரிவாக்கம் செய்ய உள்ளோம். அப்போது திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தைவிட நாகர்கோவில் ரெயில் நிலையம் பெரிதாகிவிடும். அப்போது அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மேலும் குமரி மாவட்ட மக்களுக்கு புதிய ரெயில்களும் கிடைக்கும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Next Story