ஈரோடு வெண்டிபாளையத்தில் பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக டாஸ்மாக் கடை மூடல்
ஈரோடு வெண்டிபாளையத்தில் பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு வெண்டிபாளையத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசாரும், டாஸ்மாக் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. கடையை அகற்றும்வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக இருந்தனர். மேலும், போலீஸ் பாதுகாப்புடன் கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வந்தது.
பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் இரவு 8 மணிஅளவில் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டது. அதன்பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த நிலையில் பொதுமக்களின் போராட்டம் எதிரொலியாக வெண்டிபாளையம் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்று அந்த டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘டாஸ்மாக் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அந்த கடையை நிரந்தரமாக மூட வேண்டும். மேலும், சில நாட்கள் கழித்து மீண்டும் கடையை திறக்க முயன்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’, என்றனர்.