தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் கள்ளக்காதலி கைது பரபரப்பு வாக்குமூலம்


தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் கள்ளக்காதலி கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 13 Nov 2018 10:15 PM GMT (Updated: 13 Nov 2018 9:32 PM GMT)

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பெரிய மஞ்சவாடியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் அஜீத்குமார் (வயது 22). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினர் அனிதா (31) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்த அஜித்குமார் சம்பவத்தன்று இரவு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது அவரை காணவில்லை.

இதனால் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் அஜீத் குமாரை தேடினர். அப்போது அனிதா வீட்டில் அஜீத்குமார் உடலில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், தனியார் நிறுவன ஊழியர் கொலை தொடர்பாக கள்ளக்காதலி அனிதா, அவருடைய கணவர் ஜெயராமன் ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் தனித்தனி இடத்தில் வைத்து துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலி அனிதா வாலிபரை கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அனிதாவை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அனிதா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

எனது கணவர் ஜெயராமன் கூலித்தொழிலாளி. எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். எனக்கும், அஜீத்குமாருக்கும் இடையே 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அஜீத்குமார் எனக்கு மகன் உறவு முறையாகும். எங்களின் கள்ளக்காதல் விவகாரம் கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் எங்கள் 2 பேரையும் கண்டித்தனர். இதனால் நான், அஜீத்குமாருடன் உள்ள தொடர்பை கைவிட முடிவு செய்தேன்.

தீபாவளிக்கு ஊருக்கு வந்த அஜீத்குமார் சம்பவத்தன்று இரவு எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்போது கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினேன். இதுதொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான் அஜீத்குமாரை பிடித்து தள்ளினேன். அப்போது சுவரில் மோதியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். உடனே நான் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து அஜீத்குமாரின் நெஞ்சு மீது போட்டு கொன்றேன். சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டதாக அனிதா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்த கள்ளக்காதலி அனிதாவை கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story