விளைநிலங்களில் யானைகள் நுழையாமல் தடுக்க சூரியஒளி மின்வேலி அமைச்சர் தொடங்கி வைத்தார்


விளைநிலங்களில் யானைகள் நுழையாமல் தடுக்க சூரியஒளி மின்வேலி அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 9:40 PM GMT)

ஓசூர் அருகே விளை நிலங்களில் யானைகள் நுழையாமல் தடுக்க அமைக்கப்பட்ட சூரியஒளி மின்வேலியை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காமன்தொட்டி, சானமாவு வனப்பகுதிக்கு உட்பட்ட போடூர் கிராமத்தில் யானைகள் விளைநிலங்களில் நுழையாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிற்சாலைகளின் பங்களிப்புடன் ரூ.20 லட்சம் மதிப்பில் சுமார் 4.5 கி.மீ. தூரத்திற்கு தொங்கும் சூரியஒளி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழாவிற்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கி, தொங்கும் சூரியஒளி மின்வேலியை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் பிரபாகர், தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் உலகநாதன், மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வனத்துறைக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். குறிப்பாக, வன உயிரினங்களால் உயிர் சேதம் மற்றும் விளைநிலங்கள் பாதிக்கப்படும்போது அதற்கான நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.

ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் சூளகிரி பகுதியில் வன உயிரினங்களால் உயிர் சேதம் மற்றும் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் விளைநிலங்கள் பாதிக்காத வகையில், சூரிய ஒளி மின்வேலி மற்றும் அகழிகள் அமைக்கப்பட்டன. சானமாவு வனப்பகுதியில், கர்நாடக மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள யானைகள், அவ்வப்போது முகாமிடும் யானைகளால் உயிர் சேதம் மற்றும் ராகி, நெல், சோளம் போன்ற விளைபயிர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை போக்கும் வகையில், போடூர் கிராம வனப்பகுதியில், தொங்கும் சூரியஒளி மின்வேலி நவீன தொழிற்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூரியஒளி மின்வேலிகளை யானைகள் தாக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், போடூர், ஆலியாளம், ராமாபுரம், பாத்தகோட்டா மற்றும் வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார். இதில், வனச்சரக அலுவலர் சீதாராமன், கால்நடை மருத்துவர் பிரகாஷ், செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், கண்காணிப்பாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story