கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல், 80 பேர் கைது


கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல், 80 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2018 10:45 PM GMT (Updated: 13 Nov 2018 10:02 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் நேற்று கோவை டாடாபாத்தில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாநிலை தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் பெருமாள் போராட்டத்தை தொடங்கிவைத்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–

தமிழக மின்வாரியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின் வாரியமே ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்து தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு வாரியம் அறிவித்த கருணை தொகையான ரூ.4 ஆயிரத்தை அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தானே புயல், வர்தா புயல் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படும் போது இரவு, பகல் பாராமல் உணவின்றி உழைத்த ஒப்பந்த பணியாளர்களை புறக்கணிக்காதே, கஜா புயல் வருகிறது மறந்துவிடாதீர்கள் என்று கோ‌ஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் விவேகானந்தன், அருள்ராஜ், மணிகண்டன், அருணகிரிநாதன் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.


Next Story