ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேதமான தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு


ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேதமான தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 14 Nov 2018 4:00 AM IST (Updated: 14 Nov 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேதமான தடுப்பு சுவரை சீரமைக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவு, கண், பல், மூக்கு, தொண்டை, எலும்பு மருத்துவம், குழந்தைகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு உள்பட மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதுதவிர முதல்–அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு என்று தனியாக சிகிச்சை பிரிவு இருக்கிறது. ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு மஞ்சூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

தினமும் சிகிச்சைக்காக 500–க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மலைப்பாதையில் ஏதேனும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளானால், படுகாயம் அடைந்தவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற படுக்கை, கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. ஆஸ்பத்திரியின் பின்புறம் மற்றும் முன்புறத்தில் பாதுகாப்புக்காக சுற்று சுவர், தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டியில் பெய்த கனமழையின் போது, அரசு ஆஸ்பத்திரியின் முன்புறத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில், அவ்வப்போது மண் சரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறது. இதனால் சாலையின் ஒருபுறத்தில் மண் குவிந்து காணப்படுகிறது. அதன் காரணமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உடைந்து உள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

உடல் பெலவீனம் அடைந்தாலோ அல்லது நோய் ஏற்பட்டாலோ அவர்கள் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று குணமாகி செல்கிறார்கள். இதன் மூலம் மக்களுக்கு ஆஸ்பத்திரி சேவையாற்றி வருகிறது. இதற்கிடையே அவசர சிகிச்சை பிரிவின் முன்பகுதியில் தடுப்பு சுவர் இடிந்ததால் மண் சரிந்து விழுந்து பல நாட்கள் ஆகிறது. சாலையில் விழுந்த மண்ணை அகற்றி, தடுப்பு சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் ஆஸ்பத்திரியின் சில கட்டிடங்கள் அந்தரத்தில் தொங்குவது போன்று காட்சி அளிக்கிறது. வருகிற காலங்களில் மழை அதிகமாக பெய்தால், அப்பகுதியில் மேலும் மண் சரிவு ஏற்பட்டு பெரும் ஆபத்து நேரிட வாய்ப்பு உள்ளது. எனவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story