‘கஜா’ புயல் எதிரொலி: 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


‘கஜா’ புயல் எதிரொலி: 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 14 Nov 2018 4:00 AM IST (Updated: 14 Nov 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் எதிரொலியாக, 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கடலூர் முதுநகர்,

‘கஜா’ புயல் எதிரொலியால் கடலூர் துறைமுகத்தில் இருந்து 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் மீன்வலைகளை பராமரிப்பதில் தீவிரம் காட்டியுள்ளனர்.

வங்கக்கடலில் ‘கஜா’ புயல் உருவாகி உள்ளது. இப்புயல் நாளை(வியாழக்கிழமை) கடலூருக்கும்- பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பைபர் படகு, விசைப்படகு மீனவர்கள் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. தொடர்ந்து நேற்றும் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடலூர் துறைமுக பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி, தாழங்குடா உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தியுள்ள னர். மேலும் புதிய மீன்பிடி வலைகளை பின்னுவதிலும், பழுதடைந்த வலைகளை பராமரிப்பதிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மீன்வளத்துறை துணை இயக்குனர் ரேணுகா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், வங்கக்கடலில் உருவான கஜா புயல் நாளை மறுநாள்(நாளை) கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் துறைமுகம், அன்னங்கோவில், முடசல்ஓடை, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2,426 விசைப்படகுகள், 1,075 நாட்டுமர படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்பு ஏற்பட்டால், மீனவ கிராம மக்களை தங்கவைப்பதற்காக புயல் பாதுகாப்பு மையம் தயார் நிலையில் உள்ளது என்றார்.


Next Story