‘கஜா’ புயல்: மீட்பு பணிக்கு 2,600 போலீசார் தயார் நிலையில் உள்ளனர் - டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் பேட்டி


‘கஜா’ புயல்: மீட்பு பணிக்கு 2,600 போலீசார் தயார் நிலையில் உள்ளனர் - டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் பேட்டி
x
தினத்தந்தி 13 Nov 2018 11:15 PM GMT (Updated: 13 Nov 2018 10:39 PM GMT)

‘கஜா’ புயலால் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணிக்காக 2,600 போலீசார் தயார் நிலையில் உள்ளனர் என்று டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

கடலூர்,

வங்கக்கடலில் உருவாகிய ‘கஜா’ புயல் நாளை (வியாழக்கிழமை) கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்துடன் காற்று வீசும் என்றும் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தை தாக்கிய ‘தானே’ புயலின் வேகத்தை விட ‘கஜா’ புயலின் வேகம் குறைவாக இருக்கும் என்றாலும் போதிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ் குமார் நேற்று மதியம் கடலூருக்கு வந்தார். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் ‘கஜா’ புயலை எதிர்கொள்வதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து உள்ளேன். கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 56 கிலோ மீட்டர் நீள கடற்கரையும், 44 கடலோர கிராமங்களும் உள்ளன. அனைத்து கடலோர கிராமங்களிலும் உள்ளூர் போலீசாரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதுதவிர பேரிடர்காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக பயிற்சி பெற்ற தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்கள் 30 பேரும் கடலூர் மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 2,600 போலீசார் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக தயார் நிலையில் உள்ளனர்.

மீட்பு பணிக்காக வாகனங்கள், படகுகள், மரம் அறுக்கும் சாதனங்கள், லைப் ஜாக்கெட், ஏணிகள், கோபுர மின் விளக்கு, டார்ச் லைட்டுகள், 300 வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட சாதனங்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். கடந்த ஆண்டுகளில் புயல் மற்றும் மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட 274 இடங்களை கண்டறிந்து உள்ளோம்.

மாவட்ட நிர்வாகத்துடன் காவல்துறையும் இணைந்து முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக காவல்துறை சார்பில் பொறுப்பு அதிகாரியாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுதவிர கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 2 போலீசாரும் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் கூறினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உடன் இருந்தார்.


Next Story