சேலத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் - 182 பேர் கைது


சேலத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் - 182 பேர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2018 4:38 AM IST (Updated: 14 Nov 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்திய மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 182 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பானது, அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், முத்தரப்பு ஒப்பந்தப்படி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது.

மேலும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். மாதம் 25 நாட்கள் வேலை வழங்க வேண்டும். மின் விஸ்தரிப்பு பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நேற்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இந்த அமைப்பின் சேலம் கிளை சார்பில், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் இளங்கோ, துணைத்தலைவர் ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக கூறி 7 பெண்கள் உள்பட 182 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story