காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை - சேலத்தில் முத்தரசன் பேட்டி


காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை - சேலத்தில் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 14 Nov 2018 4:44 AM IST (Updated: 14 Nov 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று சேலத்தில் முத்தரசன் கூறினார்.

சேலம்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் சேலத்தில் விவசாயிகள் மாநில மாநாடு நடக்கிறது. இதற்கான ஆயத்த கூட்டம் நேற்று சேலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சமீப காலமாக சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இது கண்டனத்துக்குரியது. எனவே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறிவருகிறது. எனவே பெண்கள் பாதுகாப்பிற்கு என பயிற்சி அளிக்க வேண்டும். அது துப்பாக்கி பயிற்சியாக கூட இருக்கலாம். தமிழகம் முழுவதும் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவைகளால் உயிர் இழப்பு அதிகரித்து வருகிறது.

இதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. தோல்வி பயத்தால் இடைத்தேர்தல் நடத்துவதற்கு வேறு சில காரணங்கள் கூறி வருகின்றனர்.

ஒரு வேளை தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் ஒரு தொகுதியில் கூட அ.தி.மு.க. வெற்றி பெறாது. பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்க வேண்டும் என்று மத்திய பாரதீய ஜனதா அரசு எண்ணுகிறது. அதற்காகவே இடைத்தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் முறையாக பதில் அளிக்காமல் தற்போது சரியாக கேள்வி கேட்கவில்லை என்று பத்திரிகையாளர்கள் மீது குற்றம் சுமத்தி தப்பிக்க பார்க்கிறார் என்று அவர் கூறினார்.


Next Story