அரசு ஆஸ்பத்திரியில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை; பிரெஞ்சு மருத்துவ குழுவினர் அளித்தனர்


அரசு ஆஸ்பத்திரியில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை; பிரெஞ்சு மருத்துவ குழுவினர் அளித்தனர்
x
தினத்தந்தி 13 Nov 2018 11:58 PM GMT (Updated: 13 Nov 2018 11:58 PM GMT)

புதுவை அரசு ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கு பிரெஞ்சு மருத்துவ குழுவினர் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளித்தனர்.

புதுச்சேரி,

9–வது இந்திய–பிரெஞ்சு ஆஞ்சியோ பிளாஸ்டி (இருதயத்தில் உள்ள அடைப்பினை நீக்கும் சிகிச்சை) கருத்தரங்கு ஜிப்மர் மருத்துவமனையில் நடக்கிறது. இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள பாரீஸ் நகரை சேர்ந்த டாக்டர் பேட்ரிக் ஹென்றி தலைமையிலான மருத்துவக் குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர்.

இந்த குழுவினர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை நடைபெறும் ஆபரேசன் தியேட்டரை பார்வையிட்டனர். அப்போது புதுவை டாக்டர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை தொடர்பான புதிய யுத்திகள் தொடர்பாக விளக்கமளித்தனர். மேலும் 3 நோயாளிகளுக்கு நவீன யுத்திகளை பயன்படுத்தி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையும் அளித்தனர்.

இந்த சிகிச்சையின்போது புதுவை அரசு ஆஸ்பத்திரியின் இருதய சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் மணிமாறன், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஆனந்தராஜ், ராஜாமுகமது, மணிவர்மன், ஜிப்மர் துறை தலைவர் சந்தோஷ், மருத்துவ நிபுணர்கள் அபினாஷ், ஜோசப் மற்றும் மருத்துவ குழுவினரும் உடனிருந்தனர்.

பிரெஞ்சு குழுவினரை புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன் சந்தித்து, இருதய பிரிவில் நவீன மருத்துவ யுத்திகள் குறித்து பேசினார். அப்போது புதுவை அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் மோகன்குமார், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரவி, மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story