கஜா புயலால் கன மழைக்கு வாய்ப்பு: கழிவுநீர் வாய்க்கால்களில் குப்பைகளை கொட்டக்கூடாது - நகராட்சி ஆணையர்கள் வலியுறுத்தல்
கஜா புயலால் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே மழைநீர் தடையில்லாமல் செல்ல கழிவுநீர் வாய்க்கால்களில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று நகராட்சி ஆணையர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
வங்கக்கடலில் தற்போது உருவாகி உள்ள கஜா புயல் வருகிற 15–ந் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது கன மழையுடன் சூறைக்காற்றும் வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 2 நகராட்சி நிர்வாகமும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எனவே இந்த வடகிழக்கு பருவ மழைக்காலம் முடியும் வரை பொதுமக்களோ, நிறுவனங்களோ அல்லது பிற அமைப்புகளோ விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது. தற்போது வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
இந்த இரு நகராட்சிகளின் நிர்வாகத்தில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளது. எனவே மழைநீர் தடையில்லாமல் செல்ல ஏதுவாக பொதுமக்கள் கழிவுநீர் வாய்க்கால்களிலோ, சாலையோரத்திலோ குப்பைகளை கொட்டக்கூடாது.
குப்பைகளை நகராட்சி ஊழியர்களிடம் நேரடியாகவோ அல்லது அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். கட்டுமான பொருட்களை சாலைகளில் கொட்டி வைத்திருப்பவர்கள் வாய்க்காலில் அடைப்பு ஏற்படாத வண்ணம் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.