வெள்ளையூர் ஊராட்சிக்கு குடிநீர் கேட்டு தலைவாசல் ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை


வெள்ளையூர் ஊராட்சிக்கு குடிநீர் கேட்டு தலைவாசல் ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 14 Nov 2018 10:30 PM GMT (Updated: 14 Nov 2018 4:56 PM GMT)

வெள்ளையூர் ஊராட்சி பகுதிக்கு குடிநீர் கேட்டு தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் நேற்று பெண்கள் முற்றுகையிட்டனர்.


தலைவாசல்,

தலைவாசல் அருகே வெள்ளையூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் 9-வது வார்டு ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 500 குடும்பத்தினர் உள்ளனர்.

இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் சரக்கு வேனில் காலிக்குடங்களுடன் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அங்கு அவர்கள் தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி, ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அங்கு வந்த ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்( கிராம ஊராட்சி) ராஜேந்திரன், அந்த பெண்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். அவரிடம், எங்கள் பகுதிக்கு கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் பாலம் கட்டும் பணி நடப்பதால் தண்ணீர் அறவே கிடைப்பது இல்லை என்பதால் கிணற்று நீரை தான் குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு மேட்டூர் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் முறையிட்டனர்.

இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்( கிராம ஊராட்சி) ராஜேந்திரன் உறுதி அளித்தார். இதையடுத்து அந்த பெண்கள் அங்கிருந்து தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

Next Story