கோட்டைப்பட்டினத்தில் துணிகரம் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் 97 பவுன் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


கோட்டைப்பட்டினத்தில் துணிகரம் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் 97 பவுன் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Nov 2018 11:15 PM GMT (Updated: 14 Nov 2018 5:33 PM GMT)

கோட்டைப்பட்டினம் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் பீரோவை உடைத்து, 97 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் நூர்தீன் (வயது 49). அவரது மனைவி அனிஷா பானு. மகள் தாரா. நூர்தீன் அதேபகுதியில் சவுண்ட் சர்வீஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதால் அவருக்கு சிகிச்சை அளிக்க தனது காரில், மனைவி, குழந்தையுடன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். மருத்துவமனையில் அனிஷாபானுவை டாக்டரிடம் காண்பித்து விட்டு, காரில் இரவு வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வீட்டின் உள்அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 97 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.35 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் பீரோவில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து நூர்தீன் கோட்டைப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தெட்சிணாமூர்த்தி, கோட்டைப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மார்சலும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து நூர்தீன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினார். டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story