பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
பெருந்துறை,
அரியலூர் மாவட்டம் பெண்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு மணிகண்டன் (வயது 19), ரவிவர்மன் என 2 மகன்கள் உள்ளனர். தற்போது சுப்பிரமணியம் திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி அந்தப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இதில் மூத்த மகன் மணிகண்டன் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மணிகண்டன் மற்றும் அவருடன் படிக்கும் நண்பர்கள் திலீபன், கோகுல் ஆகியோருடன் பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி பாலக்கரை பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்கச்சென்றார்.
அப்போது 3 பேரும் சேர்ந்து வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தனர். இதில் மணிகண்டன் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். மேலும் அவருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. இதனால் அவர், தன்னை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினார்.
இதனை கவனித்த அவருடைய நண்பர்கள் மணிகண்டனை காப்பாற்ற முயன்றனர். எனினும் அவர்களால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்–இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் மீனவர்கள் உதவியுடன் வாய்க்காலில் மூழ்கிய மணிகண்டனை தேடினார்கள்.
இதில் மணிகண்டன் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தொலைவில் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாய்க்காலில் மூழ்கி இறந்த மணிகண்டனின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.