கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை: கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் ககன்தீப்சிங் பேடி ஆய்வு


கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை: கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் ககன்தீப்சிங் பேடி ஆய்வு
x
தினத்தந்தி 14 Nov 2018 11:15 PM GMT (Updated: 14 Nov 2018 8:23 PM GMT)

கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ககன்தீப்சிங்பேடி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளருமான ககன்தீப் சிங் பேடி, கடலூர் மாவட்டத்தில் கஜா புயலை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை நேற்று ஆய்வு செய்தார். குறிப்பாக அவர் கடலோர கிராமங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் அருகே உள்ள தாழங்குடா கடற்கரை கிராமத்துக்கு சென்ற அவர், கடற்கரையோரமாக மீனவர்கள் மீன்பிடி படகுகளை நிறுத்தி வைத்திருந்ததை பார்வையிட்டார். புயல் எச்சரிக்கை காரணமாக அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களிடம், படகுகள் அனைத்தையும் கயிற்றால் கட்டி, பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் தேவனாம்பட்டிணம் கடற்கரை பகுதிக்கு சென்றார். அங்கும் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் கடலோர பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கடலூர் துறைமுகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் மாவட்டத்தின் கடலோர கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலக கூட்டரங்கில் கஜா புயலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

அதில் ககன்தீப்சிங்பேடி கலந்து கொண்டு பேசியதாவது:–

மாவட்டத்திலுள்ள புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அந்த மையங்களில் உணவு பொருட்களை தயார் நிலையில் வைத்திருப்பதோடு, உணவு தயாரிக்கும் பாத்திரங்கள் மற்றும் ஆட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் இருக்கின்றார்களா? என்றும், படகுகள் அனைத்தும் கயிறுகளால் கட்டப்பட்டு, மீன்வலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? என்பதை மீன்வளத்துறை துணை இயக்குனர் உறுதி செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை தர வேண்டும்.

தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதோடு, புயல் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தால் அதனை உடடினயாக அப்புறப்படுத்த வேண்டும்.

தேவையான அளவிற்கு உணவு பொருட்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story