போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை


போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை
x
தினத்தந்தி 14 Nov 2018 10:15 PM GMT (Updated: 14 Nov 2018 8:51 PM GMT)

சென்னை புறநகரில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறப்பதால் கல்லூரி மாணவ–மாணவிகள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். போலீசார் தீவிர நடவடிக்கைகள் மூலம் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. வட சென்னை பகுதிகளை சேர்ந்த கஞ்சா மொத்த வியாபாரிகள் மூலம் சென்னையின் பல பகுதிகளுக்கு கஞ்சா சில்லரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சைதாப்பேட்டை, சென்னை மெரினா கடற்கரை ரெயில் நிலையங்களில் மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரிகளுக்கு கஞ்சா கை மாற்றப்படுகிறது.

இப்படியாக சைதாப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம், பொத்தேரி, செங்கல்பட்டு, மதுராந்தகம் வரை உள்ள ரெயில் நிலையங்களில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இது ஒருபுறம் இருக்க புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள், பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

பல்லாவரம் ரேடியல் சாலை, வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலைகளில் மோட்டார்சைக்கிளில் வலம் வரும் கஞ்சா வியாபாரிகள் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனையை வெகு தீவிரமாக செய்து வருகின்றனர். கல்லூரிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதை எந்த கல்லூரி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. இந்த வி‌ஷயம் வெளியில் தெரிந்தால் கல்லூரிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என கருதி கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என கூறப்படுகிறது.

இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய கல்லூரிகளில் கஞ்சா புழக்கம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. மாணவிகளும் தங்களுக்கு தெரிந்த மாணவர்கள் மூலம் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

பெரும்பாலும் விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது. படிக்க வேண்டிய காலத்தில் கஞ்சா போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் காலபோக்கில் கஞ்சா வியாபாரிகளிடம் ‘கமி‌ஷன்’ பெற்று கொண்டு சக மாணவ–மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யும் ஏஜெண்டாக மாறி தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் யார்? என்று போலீசாரே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ரகசிய வார்த்தைகள் மூலம் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கஞ்சா போதையில் போலீசாரிடம் பிடிபடும் மாணவர்கள் தங்களுக்கு அதை விற்பனை செய்தவர் யார்? என தெரியாது என்று கூறிவிடுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க கஞ்சா போதைக்கு அடிமையான மாணவர்கள் சிலர் கஞ்சா வாங்க பணம் கிடைக்காத வேளைகளில், அறுவை சிகிச்சையின் போது வலி தெரியாமல் இருக்க வழங்கப்படும் மாத்திரையை வாங்கி அதை போதை ஊசியாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்.

மருத்துவரின் சீட்டு இல்லாமல் இதுபோன்ற மாத்திரைகளை விற்பனை செய்ய கூடாது என்ற நிலை உள்ளபோதும் பணத்திற்கு ஆசைப்படும் ஒரு சில மருந்து கடைகாரர்கள் சட்டவிரோதமாக இந்த விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லூரி மாணவ–மாணவிகள் மட்டுமல்லாமல் ஏராளமான இளைஞர்கள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிக்கரைகள், மலை பகுதி, காப்புகாடு பகுதிகளில் கூட்டமாக கஞ்சா புகைப்பதும் அதிகரித்து வருகிறது.

கஞ்சா பழக்கம் மூலம் தங்கள் இளமையை தொலைக்கும் இளம் பருவத்தினர் சங்கிலி பறிப்பு, மோட்டார்சைக்கிள்கள் திருட்டு போன்ற செயல்களிலும் ஈடுபட்டு தங்கள் எதிர்கால வாழ்க்கையையும் தொலைத்து விடுகின்றனர்.

கஞ்சா விற்பனையை முழுவதுமாக தடுத்து நிறுத்த போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அதே சமயம் பொதுமக்களும், பெற்றோர்களும் கஞ்சா பழக்கத்தின் கொடுமைகளை உணர்ந்து தங்கள் பிள்ளைகளை தீவிரமாக கண்காணித்து அவர்களுக்கு அந்த பழக்கம் இருந்தால் மருத்துவர்களிடம் அழைத்து சென்று ‘கவுன்சிலிங்’ செய்து அவர்களை மீட்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story