பள்ளிப்பட்டில் குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


பள்ளிப்பட்டில் குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Nov 2018 10:45 PM GMT (Updated: 14 Nov 2018 9:06 PM GMT)

பள்ளிப்பட்டில் குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாண்டறவேடு ஊராட்சியில் புதிய காலனி, பழையகாலனி பகுதிகளில் சுமார் 100 –க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் மேட்டு காலனி மக்களுக்கு 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் மனு அளித்த பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இந்த பகுதி மக்கள் தங்களுக்கு குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் நேற்று காலை பொதட்டூர் பேட்டை– புண்ணியம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். பள்ளிப்பட்டு தாசில்தார் விமலா, பள்ளிப்பட்டு ஒன்றிய வளர்ச்சி அலுவலர் சேகர் ஆகியோரும் அங்கு விரைந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 2 நாட்களுக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுவரை அந்த பகுதி மக்களுக்கு டிராக்டர்கள் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story