உலக முதலீட்டாளர்கள் மாநாடு கலந்தாய்வு கூட்டம்; தொழில் வணிகத்துறை இயக்குனர் தலைமையில் நடந்தது
உலக முதலீட்டாளர்கள் மாநாடு கலந்தாய்வு கூட்டம் தொழில் வணிகத்துறை இயக்குனர் ராஜேந்திரகுமார் தலைமையில் நடந்தது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு முதன்மை செயலாளர், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனர் ராஜேந்திரகுமார் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ்நாட்டை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்ற வருகிற ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 நடைபெற உள்ளது. வணிகத்திற்கு உகந்த சூழ்நிலை, நவீன உட்கட்டமைப்பு மற்றும் சிறந்த நிர்வாகம் காரணமாக தமிழ்நாடு பெரும்பான்மையான முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் சிறந்து விளங்குகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் மட்டுமின்றி பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் மானியத்துடன் பல்வேறு திட்டங்கள் மூலமாக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.3 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்ப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு சாத்தியமான வாய்ப்புகள் இங்கு உள்ளதால் எளிதில் அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொழில் தொடங்குவதற்கு தொடர்புடைய பல்வேறு துறைகள் மூலம் பெறவேண்டிய அனைத்து விதமான உரிமங்கள், தடையில்லா சான்றுகள், மாவட்ட தொழில் மையம் ஒற்றை சாளர அமைப்பு மூலம் சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி 7 நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் முதலீட்டாளர்கள் மாநாடு வரை காத்திருக்காமல் விரைந்து இலக்கை அடைவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதலீட்டாளர்கள் மேற்கொள்ள வேண்டும். இது குறித்து மேலும் விவரங்கள் மற்றும் உதவிகளை பெற மாநில அளவில் முதன்மை செயலாளர், ஆணையர் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனரையும், மாவட்ட அளவில் பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையத்தையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் வாகன உற்பத்திக்கான உதிரி பாகங்கள், என்ஜினீயரிங் கருவிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள மாவட்டமாகும். மாவட்ட தொழில் மையம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் மூலதன மானியமாக ரூ.48 கோடியே 68 லட்சம், மின்மானியமாக ரூ.75 லட்சம் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. 625 படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ. 160 கோடி கடனுதவி வழங்கப்பட்டு அதில் ரூ.4 கோடியே 16 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 165 பயனாளிகளுக்கு ரூ.170 கோடி கடனுதவி வழங்கப்பட்டு அதில் ரூ. 4 கோடியே 63 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 97 நபர்களுக்கு ரூ.37 கோடியே 64 லட்சம் வங்கிகளால் கடன் தொகை வழங்கப்பட்டு ரூ.9 கோடியே.40 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்குபவர்களுக்கு அவர்களது மூலதனம் மட்டுமின்றி அரசின் பல்வேறு துறைகளின் மூலம் உட்கட்டமைப்பு வசதிகளையும், அடிப்படை வசதிகளும் அரசு மூலதனமாக வழங்கப்படும். எனவே திருவள்ளூர் மாவட்ட தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.