சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்ததில் அரசியல் உள்நோக்கம் - திருமாவளவன் குற்றச்சாட்டு


சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்ததில் அரசியல் உள்நோக்கம் - திருமாவளவன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Nov 2018 4:45 AM IST (Updated: 15 Nov 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

திருவள்ளூர்,

விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சார்பில் டிசம்பர் மாதம் திருச்சியில் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆயத்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பா.ஜ.க. ஆபத்தான கட்சியா இல்லையா என்ற கேள்விக்கு விடையளிக்கும் போது நடிகர் ரஜினிகாந்த் அது பலமான கட்சி என்று பதில் அளித்து இருக்கிறார். அது பலமான கட்சியா பலமில்லாத கட்சியா என்பதல்ல கேள்வி. ஆபத்தான கட்சியா என்பது தான். பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதனால் படையை விட பாம்பு பலமானது என்று பொருள் அல்ல.

இந்தியா என்றால் காந்தி. காந்தி என்றால் இந்தியா என்று எண்ணக்கூடிய அளவுக்கு அவரது புகழ் நிலைநாட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது அவரை விட உயர்ந்தவர் என உலகிலேயே மிக உயர்ந்த சிலையை சர்தார் வல்லபாய் படேலுக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் பா.ஜ.க. அரசு வைத்துள்ளது. இது காந்தியடிகளின் புகழை சிதைப்பது தான் அவர்களின் நோக்கம் என நான் கருதுகிறேன்.

வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உள்ளபோது ரூ.3 ஆயிரம் கோடியில் இப்படி ஒரு சிலை தேவையா? என்ற கேள்வி ஒருபுறம் உள்ளது. சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைத்ததில் அரசியல் உள் நோக்கம் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கருதுகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சித்தார்த்தன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:–

அண்மையில் நடந்து முடிந்த குரூப்–2 தேர்வில் பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது. வினாத்தாளை தயாரித்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளது. பொதுமக்கள் இந்த உணவுதான் உண்ண வேண்டும் என அரசு வலியுறுத்துவது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த தடையை நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story